பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு வலுக்கட்டும்

பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு வலுக்கட்டும்

றிப்தி அலி

பலஸ்தீன், காஸா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் ஒரு வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உலகளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடனான பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையிலும் தொடர்ச்சியாக பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பட்டம் மற்றும் கண்டனப் பேரணி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. எனினும், இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பலஸ்தீன் ஆதரவு போராட்டங்களின் வீரியம் தற்போது குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஓட்டிய 22 வயதான இளைஞர் முகம்மது றுஸ்தி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சில நாட்கள் தடுத்துவைக்கப்பட்டமையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு  அங்கு வருகை தந்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு இலங்கையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். கடந்த காலங்களில் பலஸ்தீன் ஆதரவு நிகழ்வுகளை மக்கள் விடுதலை முன்னணி நடாத்தியதை நாம் அறிவோம்.

எனினும், அக்கட்சியினை பிரதானமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் அக்கட்சி பலஸ்தீன விவகாரத்தில் மந்தமான போக்கை கடைப்பிடிப்பது கவலைக்குரியதாகும்.

எது எப்படியிருப்பினும் பலஸ்தீன மக்களுக்கான தமது ஒருமைப்பாட்டை இலங்கையர்கள் இன மத பேதம் கடந்து தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக கொழும்பில் மாத்திரம் இந்த நிகழ்வுகளை மேற்கொள்ளாமல், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். மாற்று இன சகோதரர்களுடன் இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் நடத்தாமல், பலஸ்தீன் விழிப்புணர்வு கண்காட்சிகள், விரிவுரைகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடியும். அது போன்று பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சமயத் தலங்களில் பலஸ்தீன மக்களுக்காக துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் ஊடாக பலஸ்தீன் மக்களுக்கான ஆதரவினை இலங்கை மக்களும் வெளிப்படுத்த முடியும். பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது உலகளாவிய மக்கள் அனைவரதும் பொறுப்பாகும்.